Wednesday, April 15, 2015

மாணவர்களுடன் ஒரு பயணம்!




இரவு பதினொருமணி. மதுரை இரயில் நிலையம். எல்லா ரயில்களும் வந்து போய், பரப்பரப்பு எல்லாம் அடங்கி ஓய்வெடுக்க ஆரம்பித்திருந்தது.  அந்த அமைதியை கலைத்து, ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு வர, ஆங்காங்கே இருட்டில் அமர்ந்திருந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக முதல் நடைமேடையில் ஒன்றுகூட ஆரம்பித்தார்கள்.


பண்டிகைநாள் என்பதால் பேருந்துக்காக  செய்த எல்லா முயற்சிகளும் வீணாய் போக, வீட்டுக்கு போய்விடலாம் என நினைத்தேன். முதலாளியின் கடுகடு முகம் நினைவுக்கு வந்து சென்னைக்கு செல்லும் கடைசி வண்டியான அனந்தபுரியை பிடித்துவிடலாம் என்ற எண்ணத்தில், வேர்க்க விறுவிறுக்க நடைமேடையை வந்தடைந்தேன்.


சில விநாடிகளுக்குள் அந்த நீண்ட ரயில் அமைதியை கலைத்து, பெரிய சத்தத்தோடு வந்து நின்றது. முன்பதிவு செய்யப்படாத (Unreserve) காம்பார்ட்மெண்டிற்கு சென்று பார்த்தால், திக்கென்றிருந்தது. வாசல்வரை நின்று கொண்டிருந்தார்கள். இது கடைசிபெட்டி. முன்னால் இருக்கும் இதேபோல இன்னொரு பெட்டிக்கு போகலாம் தான். ஆனால், அதற்கு நேரம் இல்லை. ஒருவேளை இதைவிட அதிகமாய் கூட்டம் இருக்ககூடிய அபாயமும் உண்டு. ரிஸ்க் வேண்டாம் என ஏறிக்கொண்டேன். 200 பேர்வரை அந்த காம்பார்ட்மெண்டில் நிச்சயம் இருந்தார்கள். புதிதாய் ஏறியவர்கள் உட்கார இடம் தேடினார்கள். உள்ளே ஒரே கூச்சலும் குழப்பமாய் இருந்தது.

அடுத்து வந்த நிறுத்தத்தில் இறங்கி உள்ளே நோட்டம் பார்த்த பொழுது, உள்ளே சிலர் படுத்து நன்றாக தூங்கி கொண்டு வந்தனர். 4 பேர் உட்கார வேண்டிய இடத்தில் இருவர் கால் நீட்டி உட்கார்ந்திருந்தனர். என்ன செய்யலாம்? ஒன்றும் செய்யமுடியாது.  வாயிலோரம் நின்றுகொண்டு கையில் இருந்த நாவலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.

திண்டுக்கல்லை அடையும் பொழுது, நடுநிசியாகிவிட்டது. அங்கும் சிலர் ஏறினர். அதில், நான்கு கல்லூரி மாணவர்களும் இருந்தார்கள். ஏறும்பொழுது, கலகலவென பேசிக்கொண்டே ஏறினார்கள். அந்த காம்பார்ட்மெண்டின் நிலைபுரிய அவர்களுக்கு  பத்து நிமிடங்கள் கூட ஆகவில்லை. அவர்களுக்குள் பேசிக்கொண்டு, விறுவிறுவென மக்களை விலக்கி, காம்பார்ட்மெண்டிற்குள் உள்ளே நுழைந்து, ஒரு மாணவன் கட்டளைகள் தர, மற்றவர்கள் அமுல்படுத்த என பரபரவென செயல்பட்டார்கள்.

தொந்தியும் தொப்பையுமாய் குறட்டைவிட்டு படுத்து தூங்கிக்கொண்டு இருந்தவர்களை எழுப்பி, அன்பாய் கேட்டுக்கொண்டு உட்கார வைத்தனர். சத்தம் போட்டவர்களை சத்தத்தால் அடக்கினார்கள். நின்றுகொண்டிருந்த பெரும்பான்மை மக்களின் ஆதரவு இருந்ததால், மாணவர்கள் சொல்வதை கேட்பதை தவிர வேறு வழியில்லை.


இடம் ஒதுக்கி தந்ததில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் முன்னுரிமை தந்தார்கள். அரை மணி நேரம் ஒழுங்குபடுத்தியதில் சிரமப்பட்டு நின்றுக்கொண்டிருந்த  சகலருக்கும் உட்கார இடம் கிடைத்துவிட்டது.  இடம் பறிபோனவர்கள் புலம்பியதோடு அந்த மாணவர்களை திட்டியும் தீர்த்தார்கள். இடம் கிடைத்தவர்களோ மாணவர்களின் செயல்பாடுகளை வியந்து பேச ஆரம்பித்தார்கள். மாணவர்கள் தங்களுக்கு வாசலோரம் கிடைத்த கொஞ்சூண்டு இடத்தில் அமர்ந்து காலாட்டிக்கொண்டே ஜாலியாக பேச ஆரம்பித்துவிட்டனர். அவர்களோடு சேர்ந்து மக்களை ஒழுங்குப்படுத்தியதில் எனக்கும் கூட ஒரு இடம் கிடைத்தது.  அங்கு உட்கார மனசில்லாமல் நானும் அந்த மாணவர்களோடு வாசலை ஒட்டி அமர்ந்துகொண்டேன்.

இடையில் ஒரு நிறுத்தத்தில் தொழிலாளி பீடிக்குடித்தார் என இருப்பதை பிடுங்க, ரயில்வே போலீசு முயற்சி செய்ய, பார்த்துக்கொண்டிருந்த மாணவர்கள் பைசா தராமல், பேசியே தொழிலாளியை மீட்டு வந்தார்கள்.

அடுத்து ஒரு மணி நேரத்தில், வந்த நிறுத்தத்தில் மக்கள் சிலர் ஏற வந்த பொழுது, "இவ்வளவு பேருக்கு இடம் இல்லை. வண்டி நீளம் என்பதால், நடப்பதற்கு சிரமப்படும் வயதானவர்கள் மட்டும் ஏறிக்கொள்ளுங்கள். இந்த ஸ்டேசனில் நிறைய நேரம் வண்டி நிற்கும். ஆகையால், மற்றவர்கள் முன்பெட்டிக்கு சென்றுவிடுங்கள்" என அறிவுறுத்தினார்கள். அவர்களின் பேச்சை மறுக்காமல், நிலைமையை புரிந்து கொண்டு, மீதிபேர் முன்பெட்டிக்கு நகர்ந்தார்கள். ஏறிய சிலருக்கும், பொறுப்பாய் இடம் தேடி, அவர்களையும் அமர வைத்தார்கள். தன்னுள்ளே நடக்கும் எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்து, புன்னகைத்தப்படி அந்த ரயில் இருட்டைக் கிழித்துக்கொண்டு வேகமாக போய்க்கொண்டிருந்தது.


இதற்கிடையில், சமீபத்தில் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்த வயதான அம்மா நடக்கும் வழியில் அமர்ந்திருந்ததால், போகிற, வருகிறவர்களின் செருப்பு கால் மிதிபட்டு வலியால் அழுததைப்  பார்த்த மாணவர்கள், அந்தம்மாவை பாதையை விட்டு விலகி அமர வைக்க முயற்சி செய்தார்கள். ம்ஹூம். இடம் இல்லை. எல்லோருக்கும் கேட்கிற மாதிரி, 'இனி இந்த இடத்தை கடக்கிறவர்கள் யாரும் செருப்பணிந்து செல்லக்கூடாது' என சத்தமாக அறிவித்தார்கள். அங்கேயே இருபது நிமிடங்கள் வரை இருந்து, மக்கள் அமுல்படுத்துகிறார்களா என உறுதிப்படுத்தினார்கள். அருகில் இருந்தவர்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு,  திரும்பவும் தங்கள் இடத்திற்கு வந்து, விட்டதிலிருந்து பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

சென்னைக்கான தூரம் குறைந்ததால், பயணிகள் ஏறுவது நின்று போனது. சிலர் இறங்கி கொண்டும் இருந்தார்கள்.    

‘பிறவித் தலைவர்கள்’ அவர்கள் என் மனதைக் கவர்ந்து கொண்டார்கள். பேச்சுக் கொடுத்ததில், எல்லோரும் இரண்டாமாண்டு கல்லூரி படித்துக் கொண்டிருப்பதாக சொன்னார்கள்.  ’எப்படி இந்த யோசனை?’ என கேட்டதற்கு, ”எல்லோரும் நம்ம சனங்க. இதுதான் சரின்னு எடுத்துச் சொன்னா கேட்டுக்க போறாங்க!” என்றனர்.

மாணவர்கள் என்றால் பொது மக்களுக்கு இடையூறு செய்வார்கள், பெண்களை கேலி செய்வார்கள், பொறுக்கிகள், குடும்ப நிலையை உணராதவர்கள் என்பதெல்லாம் பொதுப்புத்தியில் உறைந்து போன விசயங்கள்.

அந்த உறைந்து போன கருத்துக்கு இந்த அனுபவம் ஒரு அழகிய கவிதை அடி.


- குருத்து

(வினவில் 08/04/2015ல் வெளிவந்தது)

Friday, March 27, 2015

நீதிபதி சந்துரு யார் பக்கம் என்பது தெளிவாகிவிட்டது!

நீதிபதிகள் நியமனம் குறித்து வழக்குரைஞர்களின் தொடர் போராட்டங்களை கொச்சைப்படுத்தும்விதமாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பிப். 18 தேதியன்று ”யாருடன் போராடுகிறார்கள் வழக்கறிஞர்கள்?”, மார்ச் 16-ந் தேதியன்று “போராடும் வழக்கறிஞர்களின் சிந்தனைக்கு” என  தி இந்துவில் இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளார்.  இதற்கு வழக்குரைஞர்களின் தரப்பிலிருந்தும், அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்வினைகள் செய்துள்ளார்கள்.

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் தமிழகத்தில் வழக்குரைஞர்களின்  போராட்டங்களுக்கு பிறகு தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதி மன்றம் பொங்கி “நீதிபதிகளுக்காக பரிந்துரைக்கப்படுகிறவர்களின் சட்ட அறிவைத் தவிர, அறிவாற்றல், குணம், நேர்மை, பொறுமை, உணர்ச்சி” என நீண்ட பட்டியலிட்டு எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும் என தீர்ப்பளித்தது.

நடைமுறையில் நீதிபதிகளின் நியமன விசயத்தில் கொலீஜிய முறையில் இருப்பது என்ன?  பொதுவாக போலீசுதான் சட்டத்தை மதிக்காமல் காலில் போட்டு மிதிக்கும். அதேபோல,  நீதித்துறையும் அப்படித்தான் நடந்துகொள்கிறது.  சட்டம் தெரியாதவன், வழக்குரைஞர் தொழிலை ஒப்புக்கு செய்தவன், நீதிபதிக்கு கூஜா தூக்குபவன், உனக்கு வேண்டியவன் ஒருத்தன், எனக்கு வேண்டியவன் ஒருத்தன் என ரகசிய பேரம் நடத்தி தான் பட்டியல் தயாரித்து தான் அனுப்புகிறார்கள்.  இதையெல்லாம் பேசினால், நாறிப்போய்விடும் என்றுதான் சந்துரு கவனமாக பேச மறுக்கிறார்.

மார்ச் 25 அன்று நீதிபதிகளின் யோக்கியதையை அம்பலப்படுத்தி “அறம் பிறழ்கிறார்களா உச்ச நீதிபதிகள்” என ராமசந்திர குஹா விரிவாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில்

”உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக பெஞ்சில் இருந்த பொழுது சதாசிவம் ஒரு கொலை வழக்கில் அமித்ஷாவை விடுதலை செய்தார். ஓய்வு பெற்ற பிறகு இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ஓய்வு பெற்ற உ.நீ. மன்ற நீதிபதி சதாசிவம் கேரள ஆளுநராக பதவியில் இருக்கிறார். குறைந்த பொறுப்பு, நிறைய சம்பளம் கிடைக்கும் பதவி கிடைக்குமா என (நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு) பா.ஜ.கவின் தேசிய தலைவராக இருக்கும் அமித்ஷாவின் மகன் திருமண விழாவில் கலந்துகொள்கிறார்.


”நீதிபதிகளில் இரண்டு வகையினர் உண்டு. ஒரு பிரிவினர் சட்டங்களை நன்றாக தெரிந்து வைத்திருப்பவர்கள்.  இன்னொரு பிரிவினர் சட்ட அமைச்சரை நன்கு தெரிந்து வைத்திருப்பவர்கள்” என நீதிபதிகளை அருண் ஜெட்லி (2012ல்) கிண்டலடித்திருக்கிறார்.



நீதித்துறையில் ஊழல் எந்த அளவிற்கு புரையோடி போயிருக்கிறது என்பதற்கு சாட்சியாக 50 ஆண்டுகளாக நேர்மையாக வழக்குரைஞராக இருக்கும் சாந்திபூஷண் 2010ல் உச்சநீதி மன்றத்தின் கடந்த 16 தலைமை நீதிபதிகளில் 8பேர் ஊழல் செய்தவர்கள் என அறிக்கையாக தாக்கல் செய்தார். அதை அரசு இன்றுவரை வெளியிடவே இல்லை”.


- இப்படி உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதியிலிருந்து, உயர்நீதி மன்ற நீதிபதிவரை பல ஊழல்புகார்கள், பாலியல் புகார்கள் என ஏகப்பட்ட அழுக்குகள் இருக்கின்றன. அதைப் பற்றி எழுதினால் வண்டி வண்டியாக எழுதிக்கொண்டே இருக்கமுடியும். ”போராடுகிற வழக்குரைஞர்களுக்கு” என எழுதும் சந்துரு, “நீதிபதிகளின் கவனத்திற்கு” என ஏன் எழுத மறுக்கிறார்?

நீதிபதிகள் நியமனத்தில் வழக்குரைஞர்கள் கருத்து சொல்வது தான் சந்துருவுக்கு கோபம் கோபமாக வருகிறது.   அதனால் தான் பொதுமக்களுக்கு நீதித்துறையில் உள்ள விசயங்கள் தெரியாது என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு கீழமை நீதிமன்றங்களில் சமூகநீதி பூத்துக்குலுங்குவதாய் ரமணா ஸ்டைலில் புள்ளிவிவரங்களை கொண்டு வாயடைக்கிறார்.  அவர் வாதம் எப்படியிருக்கிறது என்றால், துப்புரவு தொழிலில் தலித் மக்கள் பெரும்பான்மை இருப்பதை காட்டுவது போல இருக்கிறது!

அதே போல பிப். 19ல் வழக்குரைஞர்கள் மற்றும் நீதிபதிகள் மீதான காவல்துறையின் வெறித்தனமான தாக்குதலை  ‘வழக்கறிஞர்-காவல்துறை மோதல்’ என இரண்டையும் சமன்படுத்தி எழுதி, குற்றத்திலிருந்து காவல்துறையை விடுவிக்கிறார். பாதிக்கப்பட்ட வழக்குரைஞர்களையும் குற்றவாளியாக்குகிறார். இதில் வழக்குரைஞர்கள் மீதான அவருடைய காழ்ப்புணர்ச்சி பச்சையாக வெளிப்படுகிறது.

எதற்கெடுத்தாலும் வழக்காடிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஊறுகாய் போல சந்துரு பயன்படுத்துகிறார்.  எத்தனை நீதிபதிகள்  வாய்தா, வாய்தா கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் வழக்கை பல ஆண்டுகாலம் நீட்டித்து இருக்கிறார்கள். அப்படியே வழக்கை விசாரித்தாலும் நீதி வழங்குவதை தள்ளிப்போடுகிறார்கள். ஒரு வழக்கை பட்டியலில் கொண்டுவர ஒரு வழக்குரைஞர் எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது! அதையெல்லாம் தெரிந்தும் பேச மறுக்கிறார்.

நம் பக்கம் நின்று கொண்டு பேசுவது போல, அரசின் உறுப்புகளில் ஒன்றான அழுகிகொண்டிருக்கும் நீதித்துறையை பாதுகாக்கும் வேலையை தான் சந்துரு அப்பட்டமாக செய்கிறார். இதன்மூலம் ஆளும் வர்க்கத்திற்கும், அரசுக்குமான ஆளாக செயல்படுகிறார். அதனால் தான் போராடும் வழக்குரைஞர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்துகிறார்.

அவர் யார்பக்கம் என்பதை புரிந்துகொள்வதற்கு தான்  நமக்கு இவ்வளவு காலமாகியிருக்கிறது!

Sunday, March 1, 2015

உனக்கும் எனக்கும்!

அவசர அவசியமாய் தின்று
ஓடியாடி உழைத்து
உடல் களைத்துப் போகையில்
இரவு உனக்காய் படுக்கை விரித்துவிடும்.
பதினைந்து நாட்களிலேயே பற்றாக்குறை
கடன்களை பெற்றெடுக்கும்.

பொய்கள் சொல்லி பொருட்கள் விற்று
ஆசை ஆசையாய் வாங்கி ஏமாந்து
சக மனிதன் மீது நம்பிக்கை இழக்கையில்
உள்ளம் கனத்துப் போகும்.

காதலாய் பழகியவர்களிடம் நட்பை வலுப்படுத்தி
நட்பாய் பழகியவர்களிடம் காதலை வெளிப்படுத்தி
இறுதியில்
முகமறியா நபருடன் வாழ்க்கை பயணிக்கும்.

ஓடுகிற ஓட்டத்தில்
ஆபூர்வமாய் திரும்பி பார்க்கையில்
வெறுமை நிலவி கண்கள் பனிக்கும்.

உனக்கும் எனக்கும் வித்தியாசமில்லை.

நீ ஏழு வயதில்
கண்ணாடி அணிந்திருப்பாய்.
நான் இருபத்தேழு வயதில்.

உன் அப்பா ஆலையிலிருந்து
ஏழு நாட்களுக்கு முன்
வெளியேற்றப்பட்டிருப்பார்.
என் அப்பாஏழு ஆண்டுகளுக்குமுன்.

உனக்கும் எனக்கும் வித்தியாசம்
உருவத்தில் மட்டுமே!
உள்ளடக்கத்தில் ஒன்றாய்.

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
உன் கனவில் கவிபாரதி வந்திருப்பான்.
வேறு வார்த்தைகள் கொண்டு
என் கனவில் பாரதிதாசன்.
ஆளுக்கொரு சாதி சொல்லி
தனித்தனியாய் கனவுகள் கண்டு
இத்தனை காலம்
சிங்கங்களுக்கும் நரிகளுக்கும்
இரையாகிப்போனோம்.

கரங்களை ஒண்றிணைப்போம்.
கனவுகளுக்கு ஆக்கம் கொடுப்போம்.
பணிவதைவிட நிமிர்வது உயர்வானது

நீ வருவாய் என!

சத்தங்களை வடிகட்டி
நுட்பமாய்
உன் கொலுசு இசையை
பதிவு செய்திருக்கின்றன
என் காதுகள்.

சலனங்களைத் தவிர்த்து
கவனமாய்
உன் ஒவ்வொரு அசைவையும்
படம் பிடித்திருக்கின்றன
என் கண்கள்.

உன் மெளனத்தைக்கூட
மொழி பெயர்க்க
கற்றிருக்கிறது
என் மனசு.

நீயில்லாத நாள்களால்
வெற்றுத்தாள்களாய்
நகருகிறது
என் நாட்குறிப்பு.

கனவுகளில் மட்டும்
தாலாட்டிப் போகிறாய்.

முளரி மொட்டு
என் கவிதைகள்
பால் நிலா
நாட்குறிப்பு - எல்லாம்
என்னோடு
உன் வருகைக்காக
காத்திருக்கின்றன.

எப்பொழுது வருகிறாய்
இங்கு
நிஜத்தில் நீ

பொம்மைகளும் விளையாட்டு பொருட்களும்!

நூறு பொருட்கள் கேட்டால்
அவள் அழுது அழுது - அல்லது
நாங்கள் அழுது அழுது
ஒன்றைத்தான் வாங்கித்தர முடிகிறது!

பொம்மைகளின் வழியே
யார்? யார்? பரிசாய் தந்தது என
அடையாளம் சொல்லிவிடுகிறாள்!

பொம்மைகளை கொண்டு
புதியவர்களை - எளிதாய்
நண்பர்களாக்கிவிடுகிறாள்!

எத்தனைமுறை கண்டித்தாலும்
கண்டுகொள்ளாமல் - வீடு முழுவதும்
பொம்மைகளை பரப்பிவிடுகிறாள்!

உடைந்த வளையல் துண்டு,
நாலு சக்கரம் இழந்த கார் - என எல்லாமும்
விளையாட்டு பொருட்களாகிவிடுகின்றன!

பொம்மைகளோடு விளையாட வைத்து
சமயங்களில் எங்களையும்
குழந்தைகளாக்கிவிடுகிறாள்!

பொம்மைகள் வாங்கிவராத விருந்தினர்கள்
விளையாட்டு பொருட்கள் இல்லாத குழந்தைப்பருவம்
நினைவுகள் - அவ்வப்பொழுது
வந்துபோவதை தவிர்க்கவே முடியவில்லை!